Thursday, May 14

காந்தி கண்ணாடி _ விமர்சனம்

Loading

காந்தி கண்ணாடி _ விமர்சனம்

செக்யூரிட்டி வேலை பார்க்கும் பாலாஜி சக்திவேல், திருமண ஏற்பாடுகளை செய்து தரும் கே பி ஒய் பாலாவிடம் தன்னுடைய அறுபதாவது திருமண நிகழ்ச்சியை நடத்தித் தரும்படி கேட்கிறார்.

இதற்கான செலவுகளை எல்லாம் கணக்கிட்டு சுமார் 50 லட்ச ரூபாய் தேவைப்படும் என்று கூறுகிறார் பாலா.

“அவ்வளவு பணத்தை எப்படி உங்களால் திரட்ட முடியும்?”  என பாலாவும் அவரது அலுவலகத்தில் உள்ளவர்களும் கிண்டல் செய்ய, தனது கிராமத்தில் உள்ள சொந்த நிலத்தை விற்பனை செய்வதற்காக பத்திரங்களைக் கொண்டு வந்து கொடுக்கிறார் பாலாஜி சக்திவேல்.

கிட்டத்தட்ட ஒரு ஜமீன்தார் அளவுக்கு வசதியான வாழ்க்கையை இளம் பருவத்தில் வாழ்ந்த பாலாஜி சக்திவேல், காதலுக்காகவும், தான் காதலித்த அர்ச்சனாவுக்காகவும் அந்த வாழ்க்கையை துறந்து, இப்போது செக்யூரிட்டியாக வாழ்ந்து வருவது தெரிகிறது.

திருமணத்திற்கு தேவைப்படும் பணத்தை கொண்டு வந்து பாலாவிடம் கொடுத்த பிறகு திடீரென பண மதிப்பிழப்பு சட்டம் அமலுக்கு வந்து விடுகிறது.

இதனால் கையில் உள்ள பணத்தை மாற்றுவதற்கு முடியாமல் பாலாஜி சக்திவேலும் பாலாவும் சிக்கலுக்கு ஆளாகின்றனர்.

பாலாஜி சக்திவேல் ஆசைப்பட்டபடி அவரது அறுபதாம் கல்யாணம் நடந்ததா இல்லையா என்பதுதான் காந்தி கண்ணாடி படத்தின் கதை.

சிறிய நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த கே பி ஒய் பாலா முதல் முறையாக முழுநீள குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார்.

கதையின் நாயகன் என்றால் அது படம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் பாலாஜி சக்திவேல்தான்.

அவரது நடை மற்றும் பாடி லாங்குவேஜ் செக்யூரிட்டி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது.

இளம் வயதில் காதலித்தபோது தன் காதலி திருமணத்தைப் பற்றி எதிர்பார்ப்புகளுடன் கனவு கண்டு தன்னிடம் கூறியதை, அப்போது நிறைவேற்ற முடியாமல் 60ஆம் கல்யாணத்திலாவது நிறைவேற்ற வேண்டும் என்று பாலாஜி சக்திவேல் முயற்சிப்பதும், அதற்காக அல்லல்படுவதும் அழுத்தமாகப் படம் ஆக்கப்பட்டிருக்கிறது.

பாலாஜி சக்திவேலுக்கு ஈடு கொடுத்து மிக அருமையாக நடித்து நெஞ்சில் இடம் பிடிக்கிறார் அர்ச்சனா.

கணவர் மீது மற்றவர் கண் படாமல் இருக்க திருஷ்டி சுற்றி போடுவதில் தொடங்கி, உடைந்து போன கணவரின் கண்ணாடிக்கு வேறு கண்ணாடி வாங்கி தர வேண்டும் என்று சொல்லி, தான் கொடுத்த பணத்திலிருந்து ஆயிரம் ரூபாயை எடுப்பதுவரை பல காட்சிகளில் நெகிழ வைக்கிறார் அர்ச்சனா.
மற்றும் நிகிலா ஷங்கர், அமுதவாணன், சரத் ரவி, ஜீவா சுப்பிரமணியம் ஆகியோரும் கவனம் ஈர்க்கும் விதத்தில் நடித்திருக்கின்றனர்.

விவேக் மெர்வின் இசையில் உருவான பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கின்றன.

பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவு கதைக்கும், காட்சிக்கும் தேவையானதை கச்சிதமாக கொடுத்திருக்கிறது.

பண மதிப்பிழப்பு காரணமாக பணத்தை மாற்றும் பாலாஜி சக்திவேல் முயற்சிகள் திரும்பத் திரும்ப பல காட்சிகளாக வந்து சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது.

பாலாஜி சக்திவேல் பெரும் பணக்காரர் என்று தெரிந்த பிறகும் அவரை “வாய்யா”  போய்யா” என்று ஏளனமாக அழைப்பதும் நடத்துவதும் நெருடலாக இருக்கிறது.

காதல் நீடித்து நிலைத்திருப்பது பணத்தையோ வயதையோ அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக காந்தி கண்ணாடி படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஷெரிஃப்.

தாராளமாக குடும்பத்துடன் கண்டு ரசிக்க வேண்டிய படம் காந்தி கண்ணாடி

மதிப்பெண் 3.5/5