![]()
மதராஸி_ விமர்சனம்
‘துப்பாக்கி’ என்ற தலைப்பிலேயே ஒரு படத்தை உருவாக்கிய இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிப்பதற்காக உருவாக்கி இருக்கும் படம் தான் ‘மதராசி’.
தமிழ்நாட்டில் விநியோகிப்பதற்காக ஆறு கண்டெய்னர் லாரிகளில் வட இந்தியாவில் இருந்து வரும் துப்பாக்கிகளை தடுத்து அழிக்க திட்டமிடுகிறார்கள் என் ஐ ஏ அதிகாரிகள்.
தற்கொலைக்கு பலமுறை முயற்சி செய்து தோல்வியடையும் சிவகார்த்திகேயனை இந்த திட்டத்தில் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள் அதிகாரிகள்.
சிறு வயதிலேயே தன் குடும்பத்தை இழந்த சிவகார்த்திகேயன், டெல்யூஷன் என்ற மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.
யாருக்காவது ஏதாவது ஆபத்து என்றால், தானாக முன்வந்து அவர்களைக் காப்பாற்றுவார் சிவகார்த்திகேயன்.
அவரது இந்த நோயைப் பற்றியும், குண இயல்பைப் பற்றியும் தெரிந்து கொண்ட ருக்மணி வசந்த் சிவகார்த்திகேயனை காதலிக்க தொடங்குகிறார்.
தொடர் மருத்துவ சிகிச்சையால் நோய் குணமான நிலையில், ஆபத்து ஏற்படும் ஒரு பெண்ணுக்கு பக்கத்தில் இருந்தும் அந்தப் பெண்ணை காப்பாற்றத் தவறி விடுகிறார் சிவ கார்த்திகேயன்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ருக்மணி வசந்த், சிவகார்த்திகேயனை விட்டு விலகிச் சென்று விடுகிறார்.
இதனால்தான் மனம் வெறுத்து தற்கொலைக்கு முயல்கிறார் சிவகார்த்திகேயன்.
கன்டெய்னர்களில் வந்த துப்பாக்கிகளை விநியோகிக்கும் பொறுப்பு வித்யூத் ஜமாலிடமும் சபீரிடமும் ஒப்படைக்கப்பட்டுருக்கிறது.
இவர்களை மீறி, சிவகார்த்திகேயன் துப்பாக்கிகளை கைப்பற்றி அழிக்கும் முயற்சி வெற்றி அடைந்ததா இல்லையா?
மீண்டும் ருக்மணி வசந்த்துடன் அவர் இணைந்தாரா என்பதுதான் மதராசி படத்தின் கதை.
மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞர் வேடத்தில் சிவகார்த்திகேயன் அற்புதமாக நடித்திருக்கிறார்.
காதலில் கசிந்துருகி ருக்மணி வசந்திடம் பேசுவதிலாகட்டும், வித்தியூத் ஜமால் மற்றும் சபீர் கோஷ்டியை எதிர்த்து போராடி சண்டையிடும் போதும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
பக்கத்து வீட்டு பெண்மணி போன்ற தோற்றத்தில் இருக்கும் ருக்மணி வசந்த் பசை போட்டாற்போல் நம் மனதில் பதிந்து ஒட்டிக் கொள்கிறார்.
அழகான தோற்றத்திலும் முதிர்ச்சியான நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார் ருக்மணி வசந்த்.
படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் சண்டை காட்சிகள்தான்.
படத்தின் துவக்கத்தில் வரும் கன்டெய்னர் சேசிங் காட்சி ஒரு படத்தின் கிளைமாக்ஸ் அளவு வெகு சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.
கார்களும் கண்டெய்னர்களும் காற்றில் பறக்கும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சுதீப் இளமானின் திறமை ஃபைட் மாஸ்டருடன் கை கோர்த்து திரையில் பளிச்சிடுகிறது.
அனிருத்தின் இசையில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு எந்த அளவிலும் பெரிதாக உதவவில்லை.
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் கொண்டு வர நினைக்கும் சமூக விரோதிகளுக்கும், அதை தடுக்க நினைக்கும் என் ஐ ஏ அதிகாரிகளுக்கும் நடக்கும் போராட்டத்தில் காதல், காமெடி, சென்டிமென்ட் என்று மசாலாக்களை கலந்து விறுவிறுப்பான திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.
குடும்பத்துடன் கண்டு மகிழ தக்க பொழுதுபோக்கு படம் மதராஸி.
மதிப்பெண் 4/5


