10 total views, 1 views today
ஷூட் தி குருவி விமர்சனம்
2032ஆம் ஆண்டு மங்களூரில் வசிக்கும் வயது முதிர்ந்த குற்றவியல் ஆய்வாளர் ஒருவரை சந்திக்க ஓர் இளைஞனும், இளம் பெண்ணும் வருகின்றனர்.
2020ஆம் ஆண்டு கொல்லப்பட்ட குருவி ராஜன் என்ற கேங்ஸ்டரைப் பற்றி அவரிடம் விசாரிப்பதுடன், தங்கள் கொண்டு வந்திருக்கும் சில புகைப்படத் துண்டுகளை அவரிடம் காட்டி யார் அந்த நபர் என அடையாளம் காண முயல்கின்றனர்.
ஆய்வாளரும் தன்னிடம் உள்ள சில புகைப்படத் துண்டுகளை அவற்றுடன் இணைக்க, ஓர் ஆணின் புகைப்படம் முழுமையாகத் தெரிகிறது. அவன்தான் குருவிராஜன் என்ற தகவலைச் சொல்லி அவன் கதையை விவரிக்க ஆரம்பிக்கிறார் ஆய்வாளர்.
ஆய்வாளர் விவரிக்கும் குருவி ராஜன் கதை மெலிதான நகைச்சுவை இழையோட மிக அழகாக திரையில் விரிகிறது.
படம் முழுக்க விரவியிருக்கும் இந்த நகைச்சுவை பெரும்பாலன இடங்களில் ரசிக்க வைக்கிறது.
குறிப்பாக சீசன் பிசினஸ் குறித்து சிவ ஷா ரா விவரிப்பதைச் சொல்லலாம். அதுவும் “….அதஞ்சலி… நானே கிண்டியது….” என சொல்லும்போது சிரிப்பை அடக்க முடியாது.
நகைச்சுவையுடன் செல்லும் கதையோட்டத்தில் சென்டிமெண்ட் காட்சியிம் உண்டு. அம்மா போன் செய்யும்போது, அம்மா அன்பு கிடைக்காமல் ஏங்கும் நண்பனிடம் போனைக் கொடுத்து பேசும் காட்சி சிறப்பு.
படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் மதிவாணன். குருவி ராஜன் ஓரு பிராண்ட் என்று ஆய்வாளர் சொல்வது அதை பலமாக நிறுவியிருக்கும் இறுதிக்காட்சியும் பிரமாதம்.
படத்தின் மிகப் பெரிய குறை ஒலி வடிவமைப்புதான். முக்கியமான வசனங்கள் கேட்க முடியாத அளவுக்கு இசையின் இரைச்சல் மேலோங்கியிருக்கிறது. முக்கியமாக அமைச்சரை குருவிராஜன் சுடும் காட்சியை சொல்லலாம். இந்தக் காட்சியில் குருவிராஜன் வசனத்தை இசை இரைச்சல் அழுத்தியிருக்கிறது. இத்தனைக்கும் மூன்று பேர் ஒலி வடிவமைப்புக்கு பணியாற்றியிருக்கிறார்களாம். Too many cooks?
சுமார் ஒரு மணி நேரம் ஓடும் இந்தப் படத்தை எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாமல் கொண்டு சென்ற படத்தொகுப்பாளர் கமலக்கண்ணன் பாராட்டுக்குரியவர். எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி திரை அனுபவத்தை அனுபவிக்க நினைக்கும் ரசிகர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய திரைப்படம் ஷூட் தி குருவி.