![]()
வாரண்ட்’ : இணைய தொடர் விமர்சனம்
விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில், ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘வாரண்ட்’ வெப் சீரிஸ், போலீஸ் க்ரைம் த்ரில்லராக மட்டுமல்ல; சமூகத்திற்கு தேவையான ஒரு மெசேஜையும் அழுத்தமாகப் பேசுகிறது..
‘விலங்கு’ சீரிஸ் பாணியில், திருச்சியின் அசல் கிராமத்து மண்ணையும், காவல் நிலையத்தின் இறுக்கமான பக்கங்களையும் அப்படியே அச்சுப்பிசகாமல் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்கள்.
@ கதைக்களம்
ரொம்பவே சாதுவான, அப்பாவியான ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞன், அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தால் எப்படி ஒரு கொடூரமான மனிதனாக மாறுகிறான் என்பதுதான் இந்த ‘வாரண்ட்’ படத்தின் ஒன்லைன்.
தன் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அரசு வேலைக்காக முட்டி மோதும் இளைஞன் கோட்டைக்கருப்பு. ஒவ்வொரு எக்ஸாமிலும் நூலிழையில் வாய்ப்பை கோட்டைவிடும் கருப்புக்கு, (பிரசாந்த் பாண்டியராஜ் ). ஒருவழியாக போலீஸ் வேலை கிடைத்துவிடுகிறது. திருச்சி பொன்மலைக்கோட்டை ஸ்டேஷனில் டியூட்டியிலும் சேருகிறார்.
ஆனால், கடுமை காட்ட வேண்டிய அந்த போலீஸ் உலகத்தில், பச்சை மண்ணாக வளர்ந்த கருப்பால் செட் ஆக முடியவில்லை; பம்மிப் பதுங்கி நிற்கிறார்.
வேலைக்கு சேர்ந்த புதுசிலேயே, கோர்ட்டுக்கு கூட்டிட்டுப்போன கைதி ஒருவனை கோட்டைவிட்டுவிட்டு திருதிருவென முழிக்கிறார். இந்த சாதுவான குணத்தாலும், செய்யும் சொதப்பல்களாலும் சக போலீஸ்காரர்களும் சரி, லோக்கல் குற்றவாளிகளும் சரி, இவரை வச்சுச் செய்து கேலி பேசுகிறார்கள். ‘கோட்டைக்கருப்பு’ என்ற கம்பீரமான பெயர், அங்கே ‘கொட்டை’ என்று சுருங்கி, கிண்டலடிக்கும் பெயராக மாறிப்போகிறது.
ஆனால், அதே இன்னசென்ட் கருப்பு, போலீஸ் வேலையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொண்டு ரூட் மாறும்போதுதான் ஆட்டமே சூடு பிடிக்கிறது. பல கேஸ்களை அசால்ட்டாக முடித்து, வாரண்ட் டியூட்டியிலேயே மாஸ் காட்டத் தொடங்குகிறார்.
ஒருகட்டத்தில் ரௌத்திரமாக மாறும் கோட்டைக்கருப்பு, திடீரென விசாரணை கைதி ஒருவரை அடித்தே கொன்றுவிட்டதாக லாக்கப் டெத் வழக்கில் பயங்கரமாகச் சிக்குகிறார். இந்த மரண மர்மத்தை உடைக்க ஜெயபிரகாஷ் தலைமையில் ஒரு ஸ்பெஷல் டீம் களமிறங்குகிறது. இந்த இக்கட்டான இன்வெஸ்டிகேஷன் வளையத்தில் இருந்து கருப்பு எப்படி தப்பிக்கப் போகிறார்? இதன் பின்னணியில் இருக்கும் நிஜமான சதி என்ன? என்பதுதான் மீதமுள்ள எபிசோடுகளின் விறுவிறுப்பான ஆட்டம்!
@ நடிப்பு
‘விலங்கு’ வெப் சீரிஸ் மூலம் இயக்குநராக முத்திரை பதித்த பிரசாந்த் பாண்டியராஜ், இதில் ஹீரோவாக புது அவதாரம் எடுத்திருக்கிறார். பக்கத்து வீட்டுப் பையனுக்கான அசல் உடல்மொழி, போலீஸ் யூனிஃபார்மில் காட்டும் எதார்த்தமான எக்ஸ்பிரஷன்கள் என முதல் படத்திலேயே செம கச்சிதமான நடிப்பை இறக்கியிருக்கிறார். இவரது கேரக்டர் டிசைன் ஆடியன்ஸை சட்டென்று கதையோடு ஒட்ட வைக்கிறது.
இன்ஸ்பெக்டராக வரும் அருள்தாஸ், ஸ்கிரீனில் வழக்கம்போல அசல் போலீஸாகவே வாழ்ந்திருக்கிறார். புதுசாக வந்த கான்ஸ்டபிளைப் பார்த்து எரிச்சலைக்கொட்டுவது, அதே சமயம் உள்ளுக்குள் மனிதாபிமானத்தோடு கைதூக்கி விடுவது என கேரக்டரில் செம வெரைட்டி காட்டியுள்ளார். க்ளைமாக்ஸில் அவர் தன் பழைய அனுபவங்களைப் பேசும் இடம் நெஞ்சைத் தொடுகிறது.
ஹீரோவின் அப்பாவாக வரும் பாலாஜி சக்திவேல், மாமாவாக வரும் காளி வெங்கட், காதலியாக வரும் நம்ரிதா மற்றும் சாயாதேவி, கவுசல்யா என எல்லாரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ரோலை பக்காவாகச் செய்து கதையைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். குறிப்பாக, அந்த லோக்கல் ஸ்டேஷன் போலீஸ்காரர்களாக வரும் துணைக் கதாபாத்திரங்கள் சீரிஸின் ஆகச்சிறந்த பலம்!
சாம் சி.எஸ்.ஸின் பின்னணி இசை, வழக்கம் போல சீரிஸின் வெயிட்டைக் கூட்டுகிறது. குறிப்பாக இன்வெஸ்டிகேஷன் காட்சிகளிலும், ஹீரோவின் கேரக்டர் டோன் மாறும் இடங்களிலும் பிஜிஎம் (BGM) சும்மா அதிர்கிறது.
அசோக் குமாரின் கேமரா, திருச்சியின் அசல் முகத்தையும், லோக்கல் ஸ்டேஷனின் இறுக்கமான வாழ்வியலையும் எந்தவித மேக்கப்பும் இல்லாமல் இயல்பாகப் படம் பிடித்துள்ளது.
ராமரின் எடிட்டிங் கச்சிதமான ஷார்ப்பா கட் செய்து கதையோட்டத்தை வேகப்படுத்துகிறது.
இயக்குநர் விக்னேஷ் நடராஜன் சும்மா லேக் அடிக்காமல், முதல் சில நிமிடங்களிலேயே தேவையில்லாத மெலோடிராமாவைத் தவிர்த்துவிட்டு ஸ்ட்ரெய்ட்டாக கதையின் மையப்புள்ளிக்குள் நம்மை இழுத்துச் சென்றுவிடுகிறார். போலீஸாரின் தினசரி சவால்கள், ஸ்டேஷனுக்குள் நடக்கும் பாலிடிக்ஸ், ஆங்காங்கே தூவப்பட்டுள்ள எதார்த்தமான காமெடி என முதல் எபிசோடிலேயே சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளார். மிஷ்கினின் ‘அஞ்சாதே’ படம் போல, ஆரம்பக்கால போலீஸ் வாழ்க்கையின் தவிப்புகளையும், வலியையும் அழகாகக் கேப்சர் செய்துள்ளார்.
@ பிளஸ்:
ஒரே கேஸை மட்டும் பேசாமல், ஆரம்ப எபிசோடுகளில் பலதரப்பட்ட வழக்குகளைக் காட்டியிருப்பது வெரைட்டியான ஃபீல் தருகிறது.
ராவான மற்றும் ரியலிஸ்டிக்கான மேக்கிங்.
க்ரைம் த்ரில்லராகத் தொடங்கி, ஒரு சோஷியல் டிராமாவாகப் பரிணமிக்கும் விதம்.
@ மைனஸ்:
திரைக்கதை சில இடங்களில் ‘ஸ்லோ பர்ன்’ (Slow burn) முறையில் நகர்வதால், இன்னும் கொஞ்சம் ஃபாஸ்ட் பேஸில், டென்ஷன் பில்டிங்குடன் கொண்டு போயிருக்கலாம்.
நாயகனின் தனிப்பட்ட காதல் மற்றும் எமோஷன் போர்ஷன்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
@ ஃபைனல் கமெண்ட்
‘வாரண்ட்’ தொடர், விறுவிறுப்பான திரைக்கதையோடும், எதார்த்தமான மேக்கிங்கோடும் ரசிகர்களை அடுத்தடுத்த எபிசோடுகளை நோக்கிப் பார்க்க வைக்கும் ஒரு நல்ல க்ரைம் டிராமா. தொடரில் ஆங்காங்கே வரும் தேவையற்ற கெட்ட வார்த்தைகளை மட்டும் நீக்கியிருந்தால், குடும்பத்தினர் அனைவரும் தடையின்றி ரசிக்கும்படியாக அமைந்திருக்கும்!


